வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய இ-சேவை மைய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சேலம் சாலையில் குமரேசன் என்பவர் அவரது மனைவி சரிதாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் சரிதா திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சரிதா இ-சேவை மற்றும் ஆதர சேவை மையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து பணம் கேட்டுள்ளார். இதனை நம்பிய பலரும் சரிதாவிற்கு பணம் கொடுத்துள்ளனர்.
ஆனால் சரிதா பணம் வாங்கிகொண்டு போலியான பணி நியமன ஆணைகளை தயாரித்து அவர்களிடம் வழங்கியுள்ளார். இதனால் பணம் கொடுத்து ஏமார்ந்தவர்கள் ஆத்திரமடைந்து சரிதா மீது திருச்செங்கோடு தாலுகா அலுவகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து நில அளவை உதவி இயக்குனர் சிவக்குமார் திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சரிதாவை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார் என்றும், இதில் வேறு யாருக்கும் தொடர்ப்பு உள்ளதா என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.