கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடித்தவுடன் ஒரே நேரத்தில் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் 735 வகுப்பறைகளை கட்டுவதற்கு ரூ. 150 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார். கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்டும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டவுடன் காலை, மாலை என நடக்கும் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 114 அரசுக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் 65க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் காலை, மாலை என்று இரு ஷிப்ட் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அதிக அளவில் இருப்பதால் காலை, மாலை என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வந்தது. மாலை வகுப்புகள், காலை வகுப்புகள் நேர வேறுபாடு காரணமாக மாணவர்களுக்குக் கல்வி கற்பதற்கு போதுமான நேரம் இல்லாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
எனவே இரண்டு ஷிப்ட் முறை என்பதை மாற்றிவிட்டு காலை மட்டுமே வகுப்பு நேரம் என்கின்ற முறையினை அரசுக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிய பின்பு கல்லூரிகளை திறந்து தேர்வுகளை நடத்தவும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை எந்தநேரத்திலும் நடத்த உயர்கல்வித்துறை தயாராக உள்ளது என அமைச்சர் அன்பழகன் கூறியிருந்தார்.