சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ள. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் தான் அதிகமாக உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 373ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 117 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அம்பத்தூரை தொடர்ந்து கடைசியாக 15 ஆவது மண்டலமாக மணலியிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களில் மட்டும் சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றியதாக 27,819 நபர்களை போலீஸார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அதில் சென்னையில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முக்கிய சாலையான அண்ணா சாலையை சென்னை போலீஸார் மூடியுள்ளனர். சென்னை ஜெமினி மேம்பாலம் முதல் திருவல்லிக்கேணி வாலாஜா சிக்னல் வரை ஒரு பக்க சாலை மூடப்பட்டது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாசிய பொருட்கள் வாங்கும் நேரம் தவிர பிற நேரங்களில் இச்சாலை திறக்கப்படாது என அறிவித்துள்ளனர்.