முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மாணவன் போஸ்டர் அடித்து நன்றி சொல்லியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால் 6 கட்ட நிலையில் கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்ச்சி என்ற என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் குறுங்குடி பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற மாணவன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் முதல்வருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் வெளியிட்டது வைரலாகியுள்ளது. அதில், என்னை பத்தாவது பாஸ் போட்டு வரலாற்றுச் சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி. என்னை பார்த்து ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என எழுதியுள்ளார். இது நகைப்பிற்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.