பொங்கல் பரிசு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை பொறுக்க முடியாமல் பொய்யாக ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் கொடுத்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.
இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து அதிமுக மீது ஊழல் புகார் கொடுத்தார். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி கூறுகையில் ” அவர் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து கூறிக் கொண்டிருக்கிறார் புதிதாக கூறவில்லை. இன்று ஆளுநரை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார்.
இதற்கு காரணம் கொரோனா தொற்றால் பொது மக்கள் வாழ்வாதாரம் இழந்து இருக்கின்ற சூழ்நிலையில் ஒரு கமிட்டி உருவாக்கி வாழ்வாதாரம் இழந்து நிற்கின்ற மக்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இன்னும் சில டெல்டா மாவட்டங்களில் நிவர் புயலாலும் புரேவி புயலாலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனை கருத்தில் கொண்டு தைப்பொங்கல் அன்று அனைத்து குடும்பங்களிலும் பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கும் என்ற அறிவிப்பு வெளியிட்டேன்.
பொங்கல் தொகுப்பு வெளியிட்டது மக்களிடத்தில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாக இல்லாத குற்றச்சாட்டை இன்று எங்கள் அரசு மீதும் சுமத்தி அறிக்கையாக ஆளுநரிடம் கொடுத்துள்ளார் என கூறினார்.