கூட்டணி கட்சிகள் பிரச்சனை செய்தால், நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு முதல்வர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி என்று எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்களின் தகுதிக்கு ஏற்ப கெத்து காட்டுவார்கள். இந்தப் பழக்கத்தை கூட்டணி கட்சிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களிடையே கட்சியின் தலைமைக்கு கெட்ட பெயர் கிடைக்கிறது.
இவ்வாறு கட்சி தலைமைக்கு எந்த அவப்பெயரும் கிடைக்காத வகையில், அரசியல் வட்டாரத்தை சேர்ந்தவர்களை அடக்க வேண்டிய கடமை காவல்துறையினருக்கு இருக்கிறது. ஆனால் காவல்துறையினர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் என்ன செய்தாலும், நமக்கு எதற்கு வம்பு? என்பது போல் எச்சரிக்கையாக விலகிக் கொள்கிறார்கள்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பில், காவல்துறையின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் சில நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். தற்போது தி.மு.கவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் காவல்துறையினருடன் தொடர்ந்து மோதலில் ஈடுபடுவதாகவும், இது குறித்து அந்த கட்சி தலைவர்களிடம் கூறி கண்டிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் சார்பாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு முதலமைச்சர் தரப்பிலிருந்து வந்த தகவலில், “யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த தகவலை தொடர்ந்து, தமிழ்நாடு முழுக்க தலைமறைவாக இருக்கும் அரசியல் சார்ந்த ரவுடிகளை பாரபட்சம் இல்லாமல் கைது செய்வதற்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.