கோயில்கள் இடிக்கப்பட்டதாக இணையதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி நபர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியிருக்கிறார். அப்போது, அவர் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் செய்த சாதனைகளை இளைஞர்களிடமும் இணையதளங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மற்றும் கடமை இருக்கிறது.
என்னிடம் வந்திருக்கும் கோப்புகள் அனைத்தையும் அந்தந்த மாதத்திற்குள் தீர்வுகளை மேற்கொண்டு முடித்துள்ளேன். இதனை, இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக கடந்த எட்டு மாதங்களில் மிகப்பெரிய சாதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தாங்க முடியாமல் சிலர், நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டதாக பொய்யாக தகவல் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். எப்போது? எங்கு? எதற்காக? என்று எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. ஆனால், அந்த வதந்திகள் மட்டும் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், உண்மையாக துறை சார்பாக நாம் மேற்கொண்டு வரும் திட்டங்களை சான்றுகளுடன் வெளியிடுவது தான் அதற்கு தகுந்த பதிலடியாக இருக்கும். மலையளவு பொய் இருந்தாலும், அதனை உடைப்பதற்கு ஒரு உண்மை போதும். உண்மைகளை மக்களிடம் எடுத்துக் கூறினாலே போதுமானது என்று கூறியிருக்கிறார்.