சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன் பிறகு 118.9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 3 வழித்தடங்களில் அமைக்கப் பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.நகர் மற்றும் நந்தனம் பகுதிகளுக்கு இடையே தற்போது மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் பனகல் பார்க் மெட்ரோ ரயில் சுரங்க பாதையாக அமைய இருப்பதால் பூமிக்கு அடியில் குழி தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வெங்கட்நாராயணா சாலையில் இரு வழி சாலையை ஒரு வழியாக மாற்றியுள்ளனர். இதனால் இந்த பகுதியில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் வரை மின்னல் வேகத்தில் செல்வதோடு, சாலை ஓரங்களிலும் கூட வாகனத்தை இயக்குகின்றனர்.
இது பாதசாரிகள் மத்தியில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தாலும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வதாக தான் கூறுகிறார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை அமைத்து கூடுதல் கவனம் செலுத்தி போக்குவரத்து விதிமுறைகளை கண்கானிக்க வேண்டும் என பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.