தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க மோசடி வழக்கில் சங்க முன்னாள் தலைவரை கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள வருசநாடு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்த ராமர்(53) மற்றும் செயலாளர் பார்த்தசாரதி, காசாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 2015-2016ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் செலுத்தும் தவணை தொகையில் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தினர் சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையில் கூட்டுறவு சங்கத்தில் 26,69,000 ரூபாய் வரை மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோசடி செய்த வழக்கில் ராமர், பார்த்தசாரதி, ராமகிருஷ்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் மோசடி செய்த பணத்தை 2 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டிருந்துள்ளனர். இந்நிலையில் 2 ஆண்டுகளும் முடிவடைந்த நிலையில் அவர்கள் 3 பேரும் இன்னும் பணத்தை திரும்ப செலுத்தவில்லை.
இதனால் பெரியகுளம் சரக கூட்டுறவு துணைப்பதிவாளர் முத்துக்குமார் தேனி மாவட்ட வணிகவியல் குற்றபுலனாய்வு துறை அதிகாரிகளுடன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராமரை நேற்று கைது செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள ராமகிருஷ்ணன் மற்றும் பார்த்தசாரதியை வலைவீசி தேடி வருகின்றனர்.