Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கூட்டுறவுச் சங்க மோசடி: ஊழியர்கள் உயர்மட்ட குழு விசாரணை கோரிக்கை

கூட்டுறவு நாணய சங்கத்தில் 7.50 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் உயர் அலுவலர்களுக்கு தொடர்பிருப்பதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மோசடியில் தொடர்புள்ளவர்களே விசாரணை செய்வதால், உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டுறவுச் நாணயச் சங்க மோசடி குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். ஈரோடு பவானி சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையின் தலைவராக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு உள்ளார். இங்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள், காவலர் சீருடை ஆகியவற்றிற்கான துணிகள் பதனிடப்படுகின்றன.

ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காக 1998ஆம் ஆண்டு கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் 400 ஊழியர்கள் இதில் உறுப்பினர்களாக இருந்த நிலையில், தற்போது 130 ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஊழியர்களுக்கு சங்கத்திலிருந்து கடன் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு 2016ஆம் ஆண்டு முதல் ஊழியர்களுக்கு கடன் வழங்கியதில் 7.50 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகப் புகாரெழுந்தது.

இரண்டு லட்சம் கடன் வாங்கியவர்களின் பெயரில் 4 லட்சம் ரூபாய் பற்றுவைத்திருப்பதாகவும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும் கடன் நிலுவையில் இருப்பதாகக் கூறி பணப்பயன்களை வழங்க மறுப்பதாகவும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர். இச்சூழலில், இந்த மோசடி குறித்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மணி உத்தரவின் பேரில் நான்கு பேர் கொண்ட அலுவலர்கள் குழு ஊழியர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடன் பெற விண்ணப்பித்தபோது, விண்ணப்பத்தில் கூடுதலான தொகை குறிப்பிடப்பட்டதாகவும், ஆனால் அதைவிட குறைவான தொகையை மட்டுமே கடனாக பெற்றிருப்பதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். தற்போது விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தொகையை வாராக்கடனாக குறிப்பிட்டு தொகையை செலுத்துமாறு அலுவலர்கள் நிர்பந்திப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சங்கத்தின் செயலாளர் வீரக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். மோசடி செய்து பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாகத் தன் மீது அலுவலர்களே தவறான தகவல்களைப் பரப்பிவருவதாகவும், கூட்டுறவு சங்க விதிகளை மீறி கடன் வழங்கிய மாவட்ட கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தப்பிப்பதற்காக தன்னை பலிகடா ஆக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

கணக்குகளை சரிசெய்து விசாரணையை முடித்துக் கொள்ளலாம் என்றும் தனக்கு ஒத்துழைப்பு தருமாறும் துணைப் பதிவாளர் மணி, அலைப்பேசியில் தன்னிடம் பேசிய குரல் பதிவையும் வீரக்குமார் வெளியிட்டார். இதனிடையே கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற மோசடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஆலையின் தலைவருமான தென்னரசு அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தபின் சங்கத்தின் செயலாளர் வீரக்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். படிப்பறிவு குறைவான ஊழியர்கள் பெயரில், கூடுதலான கடன்களைப் பெற்றதாக மோசடி செய்த சம்பவத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி உயர் அலுவலர்களுக்கும் தொடர்பிருப்பதாகச் சங்க உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தற்போது விசாரணை என்ற பெயரில் அந்த அலுவலர்களே தங்களிடம் விசாரணை நடத்திவருவதாகவும், இதில் எப்படி நீதி கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே சென்னையிலிருந்து உயர்மட்ட அலுவலர்கள் குழுவினர் இதில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.

Categories

Tech |