இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது அரசியாக விக்டோரியா மகாராணி இருந்தார். இவருக்கு கடந்த 1849-ம் ஆண்டு மன்னர் துலீப் சிங் 108 காரட் கொண்ட கோகினூர் வைரத்தை கொடுத்தார். இந்தியாவில் உள்ள கோகினூர் என்ற பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வைரம் இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் கிரீடத்தில் கோகினூர் வைரமானது பதிக்கப்பட்டது. இந்த கோஹினூர் வைரத்தோடு சேர்த்து 2,800 வைரக் கற்களும் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. இந்த கிரீடத்தை தான் இங்கிலாந்து மகாராணி முக்கிய நிகழ்ச்சிகளில் அணிந்து கொள்வார்.
இந்நிலையில் சமீபத்தில் ராணி 2-ம் எலிசபெத் மறைவுக்குப் பிறகு பல்வேறு நாடுகளும் தங்கள் நாடுகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை திரும்ப கேட்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கோகினூர் வைரத்தையும் திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளி விவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது கோகினூர் வைரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது எனவும் கோகினூர் வைரத்தை திரும்ப கொண்டு வருவது குறித்து இங்கிலாந்து அரசிடம் பேசப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த தகவலால் கோகினூர் வைரம் இந்தியாவுக்கு விரைவில் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.