இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித தயக்கமும் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டில் வந்து இது தொடர்பாக தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது.இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது .
மேலும் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியைர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவிக்கையில் , காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறது . இந்த சம்பவத்தில் தொடர்புடையதிருநாவுக்கரசு , சபரி ராஜன் , வசந்தராஜன் மற்றும் சதீஷ் ஆகிய 4 பேரின் மீது காவல்துறை பரிந்துரையின் அடிப்படையில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது . இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு இருக்கின்ற பெண் அவர்களுடைய உறவினர்கள் மூலமாக எனக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் காவல்துறை நாங்கள் அளித்த வழக்கின் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் , தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் .
மேலும் அவர் கூறுகையில் , தொடர்பில்லாமல் அரசியல் ரீதியாக வழக்கின் போக்கை மாற்றக்கூடிய வகையில் தேவையில்லாமல் யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண்மணியின் சகோதரரும் கையொப்பமிட்டு புகார் தெரிவித்திருக்கிறார் . எனவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் , குடும்பத்துக்கும் களங்கத்தை விளைவிக்கக் கூடியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் .
இந்த வழக்கில் காவல்துறை முழுமையாக விசாரணை செய்து தொடர்புடையவர்களை கைது செய்திருக்கிறார்கள் .இன்னும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது முழுமையான விசாரணை செய்து யாரெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறார்களோ அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையும் , மாவட்ட நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது . நடவடிக்கை எடுக்க எந்தவித தயக்கமும் , தடுமாற்றமும் இல்லை குற்றவாளிகள் மீது எந்த தடையுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நடவடிக்கையின் வாயிலாகத் தான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.