தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தற்போதிருந்தே பொதுமக்கள் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். அதன் பிறகு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமாவார்கள். இதன் காரணமாக பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பண்டிகை காலங்களில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் கோவை போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனையடுத்து சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் ,திருச்சி போன்ற பகுதிகளுக்கும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி பகுதிகளுக்கும், புதிய பேருந்து நிலையம் மற்றும் மேட்டுப் பாளையம் சாலையில் இருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த தற்காலிகப் பேருந்து வசதியானது அக்டோபர் 21 முதல் 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதைதொடர்ந்து மேற்குறிப்பிட்ட அனைத்து பேருந்துகளும் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகளாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் இருந்து மதுரைக்கு 100 பேருந்துகளும், கோவையில் இருந்து தேனிக்கு 40 பேருந்துகளும், கோவையில் இருந்து திருச்சிக்கு 50 பேருந்துகளும், கோவையில் இருந்து சேலத்திற்கு 50 பேருந்துகளும் இயக்கப்படும்.