தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்கு வார்டு வாரியாக 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல்களை கலெக்டர் ஆர்த்தி தனது அலுவலகத்தில் வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற போகும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக இம்மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சி வார்டு வாரியாக அமைக்கப்பட்டிருக்கும் 1292 வாக்குச்சாவடிகளில் வரைவு பட்டியலை தனது அலுவலகத்தில் வைத்து கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அதை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி பெற்றுக் கொண்டுள்ளார். அதன்பின் பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அனைத்து ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் பார்வைக்காக வைக்கப்படும் என கலெக்டர் ஆர்த்தி கூறியுள்ளார்.
பின்னர் இந்தப் பட்டியல்களில் கருத்துக்களும், ஆட்சேபனைகளும் இருந்தால் அந்த விபரத்தை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான அலுவலகத்தில் இருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுக்காக நடைபெறும் கூட்டத்தில் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆர்த்தி கூறியுள்ளார்.