பிளாஸ்டிக் பைகளை சட்டவிரோதமாக கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கியுள்ளார். அந்த கூட்டத்தில் கலெக்டர் கூறும்போது, விழுப்புரம் திண்டிவனம் நகராட்சி மற்றும் பேரூராட்சி உட்பட்ட வீதிகள், கடைவீதிகள், நகர்ப்புற சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும், பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்கும் பொருட்டு குப்பை தொட்டிகள் அமைத்து அதனை நகராட்சி பணியாளர்கள் அன்றாடம் அகற்றிவிட வேண்டும் என கூறியுள்ளார். அதோடு குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும் என்று நகர்ப்புற கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குப்பைகளை தெருக்களிலோ அல்லது கடைவீதிகளிலோ கொட்டுப்பவர்கள் மீதும், சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும் கிராமங்களில் அமைந்துள்ள நீர் தேக்க தொட்டிகளை சுழற்சி முறையில் தொடர்ந்து சுத்தம் செய்து பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் எனவும், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சுகாதாரம், தன் சுத்தம் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவது போன்ற உபயோகமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும் விதிகளை மீறி காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.