தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் அவர்கள் நேரில் சென்று அனைத்து பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 7.75 லட்சம் மதிப்பீட்டில் உருவான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் அம்மா பூங்கா வழியாக அண்ணா நகர் வரை 200 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட தார் சாலையை பார்வையிட்டார். அதோடு 12.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் உணவு சேமிப்பு கிடங்கையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
இதனையடுத்து ரூபாய் 2.27 லட்சம் மதிப்பீட்டில் பொன்பரப்பிப்பட்டி பகுதியில் வசித்து வரும் ஆத்தாயி என்ற பயனாளியின் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டு கொட்டகையையும், 1.35 லட்சம் மதிப்பீட்டில் ராஜாமணி என்பவரது நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மாட்டுக் கொட்டகையையும் கலெக்டர் பார்வையிட்டு அவை சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக என்றும், தரமான பொருட்களால் கட்டப்பட்டுள்ளதா என்றும் அவற்றை அளந்து பார்த்து உறுதி செய்தார். இதனை தொடர்ந்து 1.19 லட்சம் மதிப்பீட்டில் நடப்பட்ட மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்திருப்பைதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர் போன்றோர் உடனிருந்தனர்.