மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காரணை புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் அருகே இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் பல காலங்களாக அகற்றபடாமல் இருந்த காரணத்தால் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு அந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் அந்த குப்பைகளை அகற்றும் படி உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஊரப்பாக்கம் ஊராட்சி செயலர் கருணாகரன் தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் தேக்கி வைக்கப்பட்டிருந்த அந்த குப்பைகளை ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் லாரியில் ஏற்றி களத்தூர் கிராமத்தில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆனந்தன் அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இவ்வாறு நீண்ட காலமாக அகற்றாமல் இருந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருப்பதால் பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.