தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பிள்ளை தெரு பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் பல காலங்களாக நிலுவையில் இருந்தன. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னரும் காளிராஜ் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் காளிராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் முடிவெடுத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவின் பேரில், காளிராஜை உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் குண்டர் சட்டத்தில் கைது செய்து அதன்பின் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.