தகுதியற்றவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை தடுக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது நகர் மற்றும் கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அலுவலர்களால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், பல இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதை முற்றிலும் ஒழிப்பதற்கான பணிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதுமாக இருக்கும் திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய சுகாதார பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்க வட்டார போக்குவரத்து அலுவலர், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் சேர்ந்து விபத்துக்கள் அதிகம் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் மாவட்ட வழங்கல் துறையின் மூலமாக ரேஷன் கடை வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், பின் முதியோர் உதவித்தொகை 90 ஆயிரம் நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டு வருகின்றது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உதவித்தொகைகள் முறையான நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறதா என்பதை வருவாய்த்துறையினர் கண்காணித்து தகுதியற்ற நபர்களுக்கு உதவி தொகை வழங்குவதை தடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து அடையாள அட்டை வழங்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.