பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலால் ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வில் 82 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது
சுற்றுச் சூழல் மாசடைவதை கருத்தில்கொண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சியில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கிற்கு பின் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் திருச்சியில் அதிகரித்து விட்டதாக தகவல் ஒன்று வெளியாக, சுற்றுச்சூழல் சீர்குலைவை தடுக்கும் பொருட்டு அம்மாவட்ட ஆட்சியர் திருச்சி பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கொண்ட ஆய்வில், முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் ரூபாய் 200, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் ரூபாய் 500, சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் ரூபாய் 100 என அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன்படி இரண்டு மணி நேரத்தில் வியாபாரிகளிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் ரூபாய் 82,000 அபராதம் வசூலிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் கொரோனா நோய் பரவலை தடுக்க மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக காந்தி நகர் மார்க்கெட்டில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து ஒலிபெருக்கி மூலம் மக்கள் கூட்டத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.