கொரோனா பாதிப்பு அதிகம் பரவி வரும் சூழ்நிலையில் கல்லூரி தேர்வு எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த சமயத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதை கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் தேர்வு ரத்து செய்யப்படுமா ? என்று கேள்வி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலமாகவும், சாதாரண கருத்துக்களாகவும் பரவி வந்தன.
அதுபோல் தற்போது கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பில்லாததால் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கசிந்து வரும் சூழ்நிலையில், இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். அதில், கொரோனா நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
ஆனால் அதனை ரத்து செய்தும் உத்தரவிடவில்லை. தேர்வு நடத்தலாமா ? வேணாமா? என்பது குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆலோசனையின் முடிவில் ஒரு நல்ல தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது கல்லூரி மாணவர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.