பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வருகின்றனர். இதனிடையே நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும், வருகிறது. மேலும் இதற்கான அறிவிப்பை மத்திய அரசும், மாநில அரசும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. மாநில அரசைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்த நிலையில் அது குறித்த அறிவிப்பு தமிழக அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர பிற பருவப் பாடங்களுக்கான தேர்வு எழுத விலக்கு அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு யுஜிசி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றிய விரிவான அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.