கல்லூரி பேராசிரியை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி நகரில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது வீட்டு தரைத்தளத்தில் அனிதாவின் அக்கா சண்முக கனி மற்றும் அவரது கணவர் வெள்ளைச்சாமி போன்றோர் வசித்து வருகின்றனர். இதனையடுத்து பணி முடித்துவிட்டு அனிதா மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். அப்போது இரவு 11 மணி அளவில் அனிதாவின் அறையில் இருந்து திடீரென சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முக கனி மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் மாடிக்கு விரைந்து சென்று அந்த அறையின் கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளனர்.
ஆனாலும் அனிதா கதவை திறக்காததால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது உதட்டில் ரத்த காயத்துடன் அனிதா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அனிதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனிதாவின் மர்மமான மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.