ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக முதலாவது நடைமேடையின் இறுதிப்பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சரக்கு ரயில் ஒன்று குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில்வே தண்டவாளத்தின் நடுப்பகுதியில் வாலிபர் திடீரென வந்து நின்றுள்ளார். இதனை பார்த்த சரக்கு ரயில் என்ஜின் டிரைவர் ஹாரன் ஒலி எழுப்பியும் அந்த வாலிபர் ரயிலை தண்டவாளத்தை விட்டு நகர்ந்து செல்லாமல் ரயிலுக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். இதனால் அவர் மீது சரக்கு ரயில் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இதுகுறித்து கரூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் வாலிபரின் உடையில் இருந்த கல்லூரி அடையாள அட்டையை எடுத்து பார்த்தனர். அதில் அந்த வாலிபர் ஆதனூர் பகுதியில் வசிக்கும் கோபிநாத் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அய்யர்மலையில் உள்ள கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கரூர் ரயில்வே காவல்துறையினர் கோபிநாத்தின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோபிநாத் எதற்காக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.