இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைச் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் மூலம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகக் குழு ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதியை வழங்கும்.
வகுப்பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் ஆய்வு செய்யப்படும். மேலும், 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற ஆசிரியர் நியமன எண்ணிக்கையும் முக்கியமாக ஆய்வு செய்யப்படும். அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் குழுமம் அனுமதிக்கும் அளவிற்கே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவர்களைச் சேர்க்க முடியும். ஆகவே, ஒவ்வொரு துறையிலும் ஆசிரியர்கள் பணி எண்ணிக்கை என்பது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஆனாலும், பல பொறியியல் கல்லூரிகள் இந்த ஆசிரியர் மாணவர் விகிதத்தை முறையாகப் பின்பற்றவில்லை என புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் செயலாளர், அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,’ சில பொறியியல் கல்லூரிகள் ஒரே பேராசிரியரைப் பல கல்லூரிகளுக்குக் கணக்குக் காட்டி மாணவர் சேர்க்கை அனுமதியைப் பெறுவதாக புகார்கள் வருகின்றன. இது ஏஐசிடிஇ வழிகாட்டுதலை மீறும் செயல் என்பதோடு, தொழில்நுட்பக் கல்வியின் தரத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளது.
எனவே, இதுதொடர்பாக பெறப்படும் புகார்களை ஏஐசிடிஇ விரைந்து விசாரிக்கும் என்பதோடு, அவ்வாறு விதிகளை மீறிய கல்லூரிகள் மீது சேர்க்கை அனுமதி ரத்து அல்லது கல்லூரி அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என அதில் கூறியுள்ளார்.