தஞ்சாவூரில் நடவு செய்யப்பட்டிருந்த வயலில் மாடு மேய்ந்ததற்காக வயலின் உரிமையாளர் மாட்டின் காலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே பள்ளி அக்ரஹாரம் என்ற நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் இரண்டு காளை மாடு மற்றும் மாட்டு வண்டியையும் வைத்து விவசாய தொழில் செய்து வருகிறார். வீட்டின் அருகிலுள்ள வயலில் பயிர்கள் காளை மாடு மேய்ந்தகாக கூறப்படுகிறது. இதை அறிந்த வயலின் உரிமையாளர் அரிவாளால் மாட்டின் காலை வெட்டியுள்ளார். இதனால் நிற்கக்கூட முடியாமல் மாடு நிலத்தில் சரிந்து விழுந்தது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மாட்டை பரிசோதித்த மருத்துவர் எலும்பு சேதம் அடைந்து விட்டதாகவும், சரிசெய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். மாடு படுத்த படுக்கையாக மூன்று நாட்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. இது குறித்து மாட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வாயில்லா ஜீவன் என்று கூட பார்க்காமல் துடிக்கத்துடிக்க காலில் வெட்டிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.