தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி பேசும் தகுதி யாருக்கும் இல்லை. மரியாதையாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த பண்பு பாஜகவுக்கு இருக்கிறது. ஆனால் ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவுக்கு இல்லை என்றார்.
அதன் பிறகு திமுக அமைச்சர் கீதாஜீவன் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் ஏறுவோம் என்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சசிகலா புஷ்பா நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, நாக்கு இருக்காது என்று ஆவேசமாக கூறினார். மேலும் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் ரசீதை பொதுவெளியில் காட்ட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக சவால் விடுத்திருந்த நிலையில், அதிலிருந்தே பாஜக மற்றும் திமுகவுக்கு இடையே வார்த்தை போர் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.