மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் கொரோனவை கட்டுப்படுத்தி விடலாம் என முதல்வர் தெரிவித்தார்.
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் பேசும் போது, கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 முறை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றன. ஒவ்வொரு முறை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் செயல் பட்டதன் விளைவாக இன்றைக்கு கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
நல்ல முறையில் சிகிச்சை:
வெளிநாட்டிலிருந்து வருவதன் மூலமாகவும், வெளி மாநிலத்திலிருந்து வருவதன் மூலமாகவும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் படிப்படியாக குறைக்கப்பட்டது.சென்னை மாநகரம் மக்கள் தொகை அதிகமுள்ள நகரம். குறுகலான தெருக்கள் அதிகமாக இருக்கின்றன. நெரிசலான வீடுகள் அதிகம் இருக்கின்றன. ஒரே வீட்டில் பலபேர் வசிக்கின்றார்கள். இதனால் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இருந்தாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மருந்து இல்லை:
கொரோனாவுக்கு ஒரே மருந்து ஒவ்வொருவரும் தன்னுடைய கடமையை உணர்ந்து, அரசு சொல்லுகிற வழிமுறைகளை பின்பற்றினால் இந்த வைரஸ் பரவலை தடுக்க முடியும். பொதுமக்களுடைய ஒத்துழைப்பின் மூலமாகத்தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். பொதுமக்களுடைய ஒத்துழைப்பு மிகமிக முக்கியம். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, மருந்து கண்டுபிடித்து இருந்தால் எளிதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து குணமடையச் செய்ய முடியும். ஆனால் மருந்து கண்டு பிடிக்காத சூழ்நிலையில் நம்முடைய மருத்துவர்களுடைய கடும் முயற்சியின் காரணமாக, உரிய முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அதிகமானோரை குணமடைய செய்கின்றோம்.
மக்களுக்கு விழிப்புணர்வு:
பொதுமக்கள் ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அப்படி கட்டுப்பாடோடு இருந்தால்தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். மருத்துவ நிபுணர்களுடைய வழிகாட்டுதலின்படி அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒலிபெருக்கி மூலமாக அனைத்து வீதிகளையும் எடுத்துச் சொல்கின்றோம். உள்ளாட்சித்துறை இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். வெளியே சென்று பொருட்களை வாங்கும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியிலே சென்று மீண்டும் வீடு திரும்புகின்ற போது கை கால்களை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.
சிகிச்சை பலனின்றி போய்விடும்:
இதையெல்லாம் பின்பற்றினால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். அதேபோல் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய் முற்றிய பிறகு நீங்க மருத்துவமனைக்கு சென்றால் சிகிச்சை பலனின்றி போய்விடும். பொதுமக்களுக்கு கொரோனா நோய் அறிகுறியான இருமல், தொண்டை வலி, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவது மிக முக்கியம். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் நோய் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது என்று முதல்வர் பேசினார்.