வீட்டுக்கு பரிசோதனை செய்ய வரும் பணியாளர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் உண்மையை கூறவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
சென்னை அம்மா மாளிகையில் மாநகராட்சி ஆணையர் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ” சென்னையில் மட்டும் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் வீடு, வீடாக சென்று காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் நபர்களை கண்டறிந்தோம்.
தற்போது, வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. அப்படி வீட்டுக்கு வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் உண்மையை தெரிவிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 முகாம்கள் வரை நடத்தப்படும் நிலையில், முகாம்களை அதிகரிக்க உள்ளோம்.
மேலும் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ததில் 6,000க்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம், ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவை சோதனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாவிட்டாலும் ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு குறைபாட்டை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும்.
முகாம்கள் மூலம் அறிகுறி கண்டறியப்படுபவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது” என அவர் கூறியுள்ளார். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களில் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கொரோனா பரிசோதனைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்க அளித்துள்ளார்.