உச்சநீதிமன்றம் இந்து தெய்வங்களை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமெடி நடிகருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் முனாவர் பரூக்கி என்ற காமெடி நடிகர் அங்கு நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இந்து தெய்வங்கள் குறித்து தரக்குறைவாகப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
அதோடு உத்திரப்பிரதேச மாநிலத்தில் இவர் மீது உள்ள வழக்கில் இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச நீதிமன்றத்திலிருந்து எந்த தகவலும் வராததால் மத்தியபிரதேச அதிகாரிகள் முனாவரை விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனை அடுத்து உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச அதிகாரிகளை தொடர்பு கொண்டு நீதிமன்ற உத்தரவை இணையதளத்தில் அனுப்பியுள்ளனர். அதனை சரிபார்த்து, உத்தரவை நிறைவேற்றும்படி கூறியதால் இந்தூர் சிறையிலிருந்து அதிகாரிகள் அவரை விடுவித்துள்ளனர்.