Categories
கல்வி மாநில செய்திகள்

”கருத்து சொல்லுங்க பாஸ்”…. TNPSC அறிவிப்பு ….!!

குரூப் 2 தேர்வு குறித்து கருத்துகளை பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பிரிவுகளில் அடங்கிய பணிகளுக்கு முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

முதல் நிலைத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட கேள்விகளை நீக்கிவிட்டு, பொது அறிவு சார்ந்த 200 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் எனவும், முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிபெயர்ப்பு, பொருள் உணர்திறன், சுருக்கி வரைதல், கடிதம் எழுதுதல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தேர்வர்களின் நலன் கருதி முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்வாணையம் சில மாற்றங்கள் செய்தது. அதன்படி, மொழிபெயர்ப்பு பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு தனித் தாளாக நடத்தவும், அதில் குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற வேண்டும் எனவும், அந்த மதிப்பெண் தர நிர்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவை பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்ற போதும், ஏற்கனவே இத்தேர்வுக்காக பழைய தேர்வுத்திட்டத்தின்படி தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு சில மாணவர்கள், குரூப் 2 மற்றும 2ஏ ஆகிய பதவிக்கான தேர்வுகளை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுத் திட்டங்கள் குறித்து இணையதளம் மூலம் தேர்வர்களின் கருத்துக்களைப்பெற தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, கருத்துக்களைப்பதிவு செய்வதற்கான வினாப்பட்டியல் தேர்வாணைய இணையதளத்தின் (www.tnpsc.gov.in and www.tnpscexams.in) முகப்புப் பக்கத்தில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு தொடர்பான வினாப்பட்டியல் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வாணையத்தில் நிரந்தரப்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து வினாப்பட்டியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்துக்களை 25.11.2019 முதல் 1.12.2019 பதிவு செய்யலாம்.

ஒருவர் ஒருமுறை மட்டுமே தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய இயலும் என்பதால், கேள்விகளை முழுமையாக உள்வாங்கி அதற்கு பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்

Categories

Tech |