எருதுவிடும் விழாவில் பங்கேற்று வேகமாக ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்நார் செம்பட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் போன்ற பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 316 காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தடுப்புகள் அமைக்கப்பட்ட ஓடும் வீதியில் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த எருது விடும் விழாவில் 26 பேர் மாடு முட்டியதில் காயம் அடைந்து விட்டனர். இதனையடுத்து அவர்களுக்கு ஜோலார்பேட்டை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த போட்டியில் முதல் பரிசான 50,000 ரூபாயை போட்டியில் வேகமாக ஓடிய காளையின் உரிமையாளரான முருகன் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாவதாக வெள்ளக்குட்டை பகுதியில் வசித்து வரும் காளையின் உரிமையாளர் வழக்கறிஞர் பாபுவிடம் ரூபாய் 40,000 ரூபாயும், மூன்றாவதாக அனேரி பகுதியில் வசித்து வரும் காளையின் உரிமையாளர் பிரியங்காவிடம் 3௦,௦௦௦ ரூபாயும் வழங்கப்பட்டது. இதேபோல் போட்டியில் பங்கேற்று வேகமாக ஓடி 25 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்காக நாட்டறம்பள்ளி தாசில்தார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.