Categories
தேசிய செய்திகள்

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுடன் போட்டி…. ஃபியூச்சர் குழுமத்தை வாங்கிய ரிலையன்ஸ்..!!!


இந்தியாவில் பெரிய சங்கிலித்தொடர் கடைகளைக் கொண்ட ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் 24,713 கோடிக்கு வாங்கியுள்ளது.

இந்தியாவில் ஃபியூச்சர் குழுமம் பிக் பஸார், பிரண்ட் ஃபேக்டரி என பல பெயர்களில் பெரிய சங்கிலி தொடர் கடைகளை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. குறிப்பாக பிக் பஸார் கடைகளுக்கு மெட்ரோ நகரங்களில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் சில்லறை விற்பனை சந்தையின் வரவு சுமார் 800 பில்லியன் டாலர்களாக இருந்தது. வரும் 2026-ம் ஆண்டில் சுமார் 1.75 ட்ரில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில்லரை விற்பனை சந்தையை வாங்க இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது கடன் சிக்கலை சந்தித்து வரும் ஃபியூச்சர் நிறுவனம் நாட்டில் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் பெற்றிருப்பதால் அந்த நிறுவனத்தை வாங்க பலரும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் மிகப்பெரியதான அமேசான் நிறுவனம் ஃபியூச்சர் குழுமத்தின் 1.3 விழுக்காட்டினை வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை கைப்பற்றும் நோக்கத்தில் ஜியோ மார்ட்-ஐ தொடங்கியுள்ளது. எனவே ஃபியூச்சர் குழுமத்தை முழுமையாக ரிலைன்ஸ் நிறுவனம் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 24,713 கோடி ரூபாய்க்கு ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சில்லரை வர்த்தக துறையில் அமேசான், ஃப்லிப்கார்டு, ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கிடையே போட்டிகள் உருவாகும். தற்போது தனது இருப்பை ஆன்லைனில் அதிகரித்துக் கொள்ள ஏதுவாக ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் வாங்கியுள்ளது.

Categories

Tech |