ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரித்தானியர்களுக்கு அவர்களை சொந்த நாட்டுக்குள் அனுமதிக்கும் போது தனிமைப்படுத்த கூடாது என்று பலரும் இணையத்தில் உருவாக்கப்பட்ட புகாரில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஜூலை 19-ஆம் தேதி முதல் ஆம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் பிரித்தானியாவில் முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரித்தானியர்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்று பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் Grant Shapps கூறியிருந்தார். அதேசமயம் பிரித்தானிய அரசு வழங்கும் தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே தனிமைபடுத்துதல் அவசியமில்லை என்றும், ஜெர்மனியில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பிரித்தானியாவில் பத்து நாட்கள் தனிமைபடுத்துதலோடு 170 பவுண்டுகள் கொரோனா பரிசோதனைக்காக செலவிட வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் பிரித்தானியாவுக்குள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் தங்களை அனுமதிக்க கோரி ஜெர்மனியில் தடுப்பூசி பெற்ற பிரித்தானியர்கள் இணையத்தில் புகார் மனு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதில் சுமார் 49 ஆயிரத்து 600 பேர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் அந்த எண்ணிக்கையானது ஒரு லட்சமாக உயரும் போது இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.