அத்திவரதர் வைபவம் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் இன்று அத்திவரதர் அனந்தசரஸ் குளத்துக்குள் செல்கின்றார்.
காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறும். இங்குள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
முதல் 31 நாட்கள் ( ஜூலை 31) வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், ஆகஸ்ட் 1_ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.வாழ்க்கையில் அபூர்வமாக கிடைக்கும் தரிசனம் என்பதால் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு , நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.
மேலும் அத்திவரதரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அண்டை மாநில முதல்வர்கள் , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் என பல்வேறு முக்கிய பிரபலங்களும் இந்த நாட்களில் அத்திவரதரை வழிபட்டு சென்றனர். நேற்று பாஜக மாநில தலைவர் தமிழிசை , காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் அத்திவரதரை தரிசித்தனர்.அத்திவரதர் வைபவத்தின் கடைசி மற்றும் 47-வது நாளான நேற்று அத்திவரதருக்கு ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
நேற்று தான் அத்திவரதர் வைபவத்தின் கடைசி நாள் என்பதால் அதிகாலை 5.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். கடைசி நாளில் அத்திவரதரை கான லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.கடைசி நாள் என்பதால் இரவில் நீண்ட நேரம் தரிசனம் நடைபெற்றது. இது வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அத்திவரதருக்கு அதிகாலை பரிகார பூஜை செய்து அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்பட்டு , இரவு 10- 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகின்றது என்று கோவில் அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இனி மீண்டும் அத்திவரதர் 2059_ஆம் ஆண்டு அருள்பாலிக்க வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.