உர மூட்டைகள் சரிந்து விழுந்து கூலித்தொழிலாளி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தட்சங்குறிச்சிக்கு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் நஞ்சை சங்கேந்தி காலனி தெருவில் வசித்து வந்த கூலி தொழிலாளியான பாண்டியன் என்பவர் லாரியிலிருந்து உர மூட்டைகளை இறக்குவதற்காக பின் பகுதியில் அமர்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து லாரியானது தட்சங்குறிச்சிக்கு வந்த பிறகு அதனை ஓட்டி வந்த டிரைவர் முத்துக்குமார் என்பவர் பின்னால் ஏறி பார்த்துள்ளார்.
அப்போது உர மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பாண்டியன் மூச்சுத் திணறி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.