ஐரோப்பிய ஒன்றியம் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் இனிமேல் கட்டாயமாக முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்திருக்கிறது.
கொரோனா தொற்று பரவத்தொடங்கி இரண்டு வருடங்கள் தாண்டிய நிலையில், தற்போது உலக நாடுகளில் தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த வாரத்திலிருந்து விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சியானது, ஐரோப்பா முழுக்க பொது போக்குவரத்தில் கொரோனோவிற்கு எதிரான கொள்கையை மாற்றக்கூடிய விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளது.
கொரோனா பாதிப்பு சமீபத்தில் குறையத் தொடங்கியிருப்பதாலும், தடுப்பூசி தவணைகள் மற்றும் இயற்கையாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றின் காரணமாகவும் ஐரோப்பிய நாடுகளில் விதிமுறைகளை நீக்குவதற்கு தீர்மானித்திருப்பதாக இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து அறிக்கை வெளியிட்டிருந்தன.
மேலும் இதுகுறித்து ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சியின் நிர்வாக இயக்குனரான பேட்டரிக் தெரிவித்துள்ளதாவது, பயணிகள் பொறுப்பாக இருக்க வேண்டும். தங்களுடன் அமர்ந்திருக்கும் பிற பயணிகளின் எண்ணங்களை மதிக்க வேண்டும். இருமல், தும்மல் இருக்கும் பயணிகள் அருகே இருப்பவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.