போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இருந்து காங்கேயத்திற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் காங்கேயம் வாய்க்கால்மேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தை கார் ஒன்று முந்தி சென்றது. இந்த கார் திடீரென பேருந்தின் குறுக்கே நின்றது. அதிலிருந்து இறங்கிய 2 பேர் திடீரென டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த 2 பேரும் டிரைவர் சுப்பிரமணியன் மற்றும் கண்டக்டர் ஆல்பர்ட் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த ஆல்பர்ட் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காங்கேயம் போக்குவரத்து பணியாளர்கள் 50 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மர்மநபர்களை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிரைவர், கண்டக்டரை தாக்கிய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.