அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய தொழிலதிபர் மகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் அரசு பேருந்து ஒன்று திருப்பூரில் இருந்து தேனி செல்வதற்காக தாராபுரம் வந்தது. இந்த பேருந்தை டிரைவர் ரத்தினசாமி ஓட்டி வந்துள்ளார். அதில் கோபாலகிருஷ்ணன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த அரசு பேருந்து தாராபுரம் அமராவதி ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது தாராபுரம் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரான சக்திவேல் மகன் நிர்மல்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து டிரைவர் ரத்தினசாமி ஹாரன் அடித்தும் நிர்மல்குமார் விலகவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நிர்மல்குமார், பேருந்து டிரைவர் ரத்தினசாமி மற்றும் கண்டக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் நிர்மல்குமார் கண்டக்டரை தாக்கியுள்ளார். இந்நிலையில் கண்டக்டர் கோபாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கோபாலகிருஷ்ணன் தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.