மதுபோதையில் சாமி ஊர்வலத்தில் நடனம் ஆடியதை தட்டி கேட்டதால் தனியார் பேருந்து நடத்துனர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சர்வங்தாங்கல் கிராமத்தில் நாகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின் போது அதே பகுதியில் வசிக்கும் கிரிதரன் என்பவர் தனது நண்பர்களுடன் மது குடித்துவிட்டு போதையில் ஆடியுள்ளார். இதனை தட்டி கேட்டதால் நாகேந்திரனுக்கும், கிரிதரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த கிரிதரன் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் நாகேந்திரனின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த நாகேந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிரிதரன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.