அதிகாரிகள் செய்த தொந்தரவால் பேருந்து நடத்துனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் உள்ள வ.உ.சி நகரில் இளவரசன் என்பவர் வசித்து வந்தார். இவர் மனைவி கீதா பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும்,ஒரு மகளும் உள்ளனர். இளவரசன் 14 ஆண்டுகளாக தண்டையார்பேட்டை அரசு பணிமனைக்குட்பட்ட பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சென்ற மாதம் பயணச்சீட்டு வழங்குவதில் தவறு செய்ததாக அதிகாரிகளிடம் இருந்து இவருக்கு “மெமோ” வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அன்று முதல் அதிகாரிகள் தன்னை தொந்தரவு செய்து வருவதாக தனது மனைவியிடம் அடிக்கடி கூறியுள்ளார். இச்சம்பவத்தால் மனவேதனையில் இருந்த வந்த அவர் தன் மனைவி கூறிய ஆறுதல் காரணமாக பணிக்கு ஒரு மனதோடு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர் வீட்டில் உள்ள பழைய அறையில் மனைவியின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.