அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி விற்பனை செய்யபடுவதாக கமுதி குற்றபிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பெருநாழி இன்ஸ்பெக்டர் ஏ.ஜி. முருகன் தலைமையில் குற்றபிரிவு காவல்துறையினர் முத்துசெல்லபுரம் சாலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தியுள்ளனர்.
அப்போது காரில் இருந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பியோட முயன்றுள்ளனர். இதனைபார்த்த அதிகாரிகள் காரில் இருந்த 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் 236 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை கடத்தி வந்த தூத்துக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் கணேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.