வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த மங்கலம்பேட்டை அண்ணாசிலை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டு உள்ளது. இதை அடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டதுடன், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தனது உமிழ்நீரை கொடுத்து கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதற்கான முடிவு வருவதற்கு முன்னே தனது வங்கிக்கு சென்று தனது பணிகளை மேற்கொண்டு உள்ளார். அப்போது வங்கிக்குச் சென்ற சில நிமிடங்களில் அவருக்கு போன் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், உங்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு அவர் வங்கியில் இருப்பதாக கூற உடனடியாக அங்கு விரைந்து சென்று அவரை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் வங்கியில் இருக்கும் சக ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் ஹெல்ப்லைன் நம்பர்க்கு தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்தவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, மக்களாக இருந்தாலும்சரி முடிவு வரும்வரை மட்டுமல்லாமல் அதற்கு பின்பும் 14 நாட்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டால் நம்மை சுற்றியுள்ள மக்களுக்கு பிரச்சனைகள் வராது என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.