மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழகத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதே போல, தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC .), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR ) ஆகியவற்றுக்கும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. ஒருபக்கம் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றாலும், மறுபக்கம் ஆதரவாக பாஜக தரப்பில் பேரணி நடைபெறுகிறது. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எவ்வளவுதான் போராட்டம் நடைபெற்றாலும் சிஏஏ திரும்ப பெறப்படமாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உட்பட காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் என மொத்தம் 11 மாநிலங்களில் CAA மற்றும் NPR-ஐ அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன. கேரளா மற்றும் பஞ்சாப் சட்டசபையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.
இந்தநிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொள்வதற்கு காங். கட்சியின் முன்னாள் தலைவரும், தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி வருகின்ற ஜனவரி 30-ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு செல்கிறார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.