தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சியுடன் செயல்படும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
ஜனவரி 24ஆம் தேதி தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மக்களை சந்தித்து உரையாற்றினார். அவர் உரையாற்றுவதற்கு முன்பாக அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காளிமுத்து ஆகியோர் கார்த்தி சிதம்பரத்துடன் இருந்தனர்.
ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “இளம் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் மூன்று நாட்கள் மக்களோடு மக்களாக உரையாற்ற உள்ளார். இந்த பரப்புரையால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் செல்வாக்கு கிடைக்கும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சியுடன் செயல்படும்” என்று கூறியுள்ளார்.