வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில், இந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம் ஆன்டிகுவாவில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டாஃபானி டெய்லர் 79 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 195 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தானா, ஜெமியா ரோட்ரிகஸ் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 43ஆவது ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஸ்மிருதி மந்தானா 74 ரன்களிலும் ஜெமியா ரோட்ரிகஸ் 69 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்திய மகளிர் அணி இப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. இப்போட்டியில் ஆட்டநாயகி விருதை இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தானா பெற்றார். தொடர் நாயகி விருதை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஸ்டாஃபானி டெய்லர் பெற்றார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 9ஆம் தேதி) கயனாவில் நடைபெறவுள்ளது.
Congratulations to #TeamIndia for sealing a 2-1 ODI series win in West Indies 😎👏👌 & welcome back @mandhana_smriti 🔝 knock pic.twitter.com/ou8b8pvYHY
— BCCI Women (@BCCIWomen) November 7, 2019