நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படுவார்கள் என்று காங்.தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது .இதையடுத்து திமுக நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது. அதேபோல அதிமுக சார்பில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்தது. அதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் 3 இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைதேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் கோவையில் செப்.30 ஆம் தேதி கே.எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.