Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்தி உத்தரவை ஏற்ற தமிழக காங்கிரஸ்…. வெளிமாநில தமிழர்களை மீட்க ரூ.1 கோடி நிதியுதவி!

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் அழைத்து வர தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் மாநில அரசின் ஒப்புதலுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தியும் கண்டணம் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், தொழிலாளர்கள் நமது நாட்டின் வளர்ச்சியின் தூதர்களாக உள்ளனர். பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி ரயில்வே அமைச்சகம் கொடுக்கும் நிலையில், தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணத்தை, இந்த நேரத்தில் ஏன் கொடுக்க முடியாது? என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியும், ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கான தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதற்கு ப. சிதம்பரம் வாழ்த்துக்கள் கூறி உள்ளார்.

Categories

Tech |