முந்தைய ஆட்சியில் காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரம் போல பயன்படுத்தியது என்று பிரதமர் மோடி குறை கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் இறுதி கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் ராட்லம், இமாச்சலபிரதேசத்தின் சோலன், பஞ்சாப்பின் பத்திண்டா ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைத்த காலத்தின் போது பாதுகாப்பு படைகளின் தேவைகள் 70 சதவிகிதம் வெளிநாடுகள் மூலமே பூர்த்தி செய்யப்பட்டது.
ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியாவிற்கு 150 ஆண்டுகள் அனுபவமிருந்தாலும் கூட இந்தியா இன்று வரையிலும் இறக்குமதியை நம்பி இருப்பதற்கு காங்கிரசின் தவறான கொள்கைகளே காரணம் என்றார் . மேலும் காங்கிரஸ் அரசு ஆட்சியின் போது பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரம் போல பயன்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சியில் தான் இந்த நிலை மாறியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனடைவோரின் எண்ணிக்கை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாட்டு மக்கள் தொகையை விட அதிகம் என்று மோடி தெரிவித்தார்.