டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அனைத்து எம்பிகளுக்கும் மத்திய அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவுகள் இடம் பெற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பாதுகாப்பு மந்திரி ராஜநாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர். இது தொடர்பான புகைப்படத்தை பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி சிறு தானிய உணவுகளை பிரபலப்படுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதன் பிறகு சிறுதானியங்களை பிரபலப்படுத்தினால் சிறு தானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளும் லாபம் பெறுவார்கள். பள்ளிகளில் கூட சிறுதானிய உணவுகளை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கலாம்.
அதன் பிறகு எம்பிக்கள் நடத்தும் கூட்டம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவைகளில் நடைபெறும் கூட்டங்கள் மூலமும் சிறு தானியத்தை பிரபலப்படுத்தலாம் என்றார். மேலும் கபடி போன்ற சிறப்பு விளையாட்டுகள் மீது தனி கவனம் செலுத்தி விளையாட்டுப் போட்டிகளை பிரபலப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாகவும் கூறினார்.